மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ். கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது .
இதன்போது முதன்மை நிகழ்வாக மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் புதல்வனும் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது .
அதனைத் தொடர்ந்து குமார் பொன்னம்பலத்தின் நினைவுரைகள் இடம்பெற்றன.
“மக்கள் மயப்படுத்த வேண்டிய அரசியல்” எனும் தலைப்பில் நினைவுப் பேருரையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் ஆற்றினார்.
இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், பேராசிரியர்கள், ஊடக நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள், பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.