“கடந்த அரசுகள் போல் நாமும் ஊடகங்களை அச்சுறுத்தி அடக்கமாட்டோம். ஊடகங்கள் நடுநிலையுடன் சுதந்திரமாகச் செய்திகளை வெளியிட முழு உரிமையுண்டு. அதனை எவரும் தடுத்து நிறுத்த முடியாது.” – இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அமைச்சரவையின் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த ஆட்சிக் காலங்களில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்போம். நீதியை எதிர்பார்த்து அந்த ஊடகவியலாளர்களின் குடும்பங்கள் அனுபவிக்கும் வலி, வேதனை எமக்குத் தெரியும். எனவே, அவர்களின் நீதிக்கான வேண்டுதலை நாம் நிறைவேற்றியே தீருவோம்.
ஊடகங்களை அடக்கிக்கொண்டு ஆட்சியை முன்னெடுக்க முடியாது. அவ்வாறு செய்த அரசுகளுக்கு இறுதியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.” – என்றார்.