முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் பாரிய அளவிலான சொத்துகள் உள்ளன. அவை தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை ஆரம்பிக்குமாக இருந்தால் மேலும் தகவல்களை வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள பசில் ராஜபகச்வின் சொத்துக்கள் குறித்து கடந்த காலத்தில் விமல் வீரவங்ச வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை அவரிடம் வாக்குமூலமொன்றை பெற்றிருந்தது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் இருக்கும் சொத்துகள் தொடர்பில் நான் வெளியிட்டிருந்த கருத்துகள் குறித்து வாக்குமூலமொன்றை பெற வேண்டுமென குற்றப்புலனாய் பிரிவு அழைத்திருந்தது. என்னிடம் உள்ள தகவல்களை அவர்களிடம் வழங்கியுள்ளேன்.
அமெரிக்காவில் எந்தவொரு பணியும் புரியாத பசில் ராஜபக்சவுக்கு எவ்வாறு அங்கு பாரிய அளவிலான சொத்துக்கள் இருக்க முடியும். அவரது மகன் மற்றும் உறவினர்கள் சிலரது பெயரிலும் சொத்துக்கள் உள்ளன.
இந்த அரசாங்கம் உண்மையான ஊழல், மோசடியாளர்கள் குறித்து விசாரணைகள் செய்வதாக எமக்கு தெரியவில்லை. தற்போது பசில் ராஜபக்சவின் சொத்துக்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுள்ளனர்.
அவர் இரட்டை குடியுரிமை கொண்டவர் என்பதால் விசாரணைகளை துரிதமாக ஆரம்பிக்க முடியும்.
இந்த விடயத்தில் அரசாங்கம் உண்மையான விசாரணைகளை ஆரம்பித்தால் எம்மிடம் மேலதிக தகவல்கள் இருந்தால் அதனை வழங்க முடியும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச தெரிவித்தார்.