கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதான வீதியில் பத்தாம் மைல்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலம் ஆனது 2000 ஆம் ஆண்டு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா பெருந்தொற்று காரணமாகவும்அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இடை நடுவே கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
கடந்த மாதம் வரை சம்பந்தப்பட்ட வீதி அபிவிருத்தி ஒப்பந்தகாரர்களின் பொறுப்பில் இருந்த பாலத்திற்கான பாதுகாப்பு சமிக்ஞைகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடந்த மாதத்தில் இருந்து முற்று முழுதாக அகற்றப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட பின்னர் எந்தவித பாதுகாப்பும் இன்றி பாதிக்கப்பட்ட நிலையில் பாலம் உள்ளது. இது தொடர்பாக எந்தவித சமிக்ஞைகளோ மின்விளக்குகளோ பொருத்தப்படாத காரணத்தினால் கடந்த டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 3 விபத்துக்கள் இடம் பெற்றுள்ளது.
அத்துடன் கடந்த 31 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் இவ்வீதி ஊடாக பயணிக்கும் போது பழுதடைந்த பாலம் முன்பகுதியில் உள்ளது என அறியாத நிலையில் பாலத்தின் உட்பகுதியில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து இன்று வட மாகாண ஆளுநர் அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வருகை தந்து பார்வையிட்டதுடன் எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் இப் பாலத்துக்கான புனரமைப்பு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.
அத்துடன் தற்காலிக பாதுகாப்புக்காக வீதி விளக்குகள் மற்றும் வீதி சமிக்ஞைகள் பொருத்தப்பட வேண்டும். எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கையில், மக்களின் வரிப் பணத்திலேயே புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததாகவும், வீண்விரயம் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட இருவருக்கும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.