இலங்கை மக்கள் வழங்கியுள்ள ஆணையைப் பயன்படுத்தி தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் என அனைத்து பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது. அனைத்து இன மக்களின் ஆசியுடன் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இவ்வாறு மக்கள் வழங்கியுள்ள ஆணையை பயன்படுத்தி பொருளாதாரப் பிரச்சினை மற்றும் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் என்னை நிராகரிக்கவில்லை. நாடாளுமன்றம் தெரிவாவதற்குப் பெற வேண்டிய வாக்குகளைப் பெறவில்லை என்பதே உண்மை. நான் சுமார் 20 ஆயிரம் வாக்குகளை எடுத்தேன். சில மாவட்டங்களில் 5 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவர்கள் நாடாளுமன்றம் சென்றனர். இதுதான் இந்தத் தேர்தலை முறைமை.
அதேவேளை, சிஸ்டம் சேன்ஸ் என்பதை அரசு மலையகத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.” – என்றார்.