கறைபடியாத கரங்களுடன் இருந்தால்தான் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையைச் செய்ய முடியும். கௌரவ ஜனாதிபதி அவர்களும் இதைத்தான் வலியுறுத்தியிருக்கின்றார்கள். எங்கள் அரசாங்கப் பணியாளர்கள் மக்களுக்கு சேவைவழங்கும் வகையில் எதிர்காலத்தில் தங்களை மாற்றிக்கொள்வதற்குத் தயாராகவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண விவசாய அமைச்சும், முல்லைத்தீவு மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்திய உலக மண் தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (31.12.2024) கடைப்பிடிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் நிகழ்வின் தலைமை உரையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்துதரவேண்டும் என ஆளுநரைக் கோரியதுடன் சுற்றுலாத்துறை ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திகளை முன்னெடுக்க நிதி ஒதுக்கீடு அதிகரித்துத்தருமாறும் கேட்டுக்கொண்டார்.
பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனதுரையில், நாங்கள் கல்வி கற்கின்ற காலத்தில் இவ்வாறு பல தினங்கள் கடைப்பிடிக்கப்படவில்லை. இப்போது ஐ.நா.வால் பல தினங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவ்வாறு ஒரு தினத்தை அறிமுகப்படுத்துவதென்றால் அதன் முக்கியத்தும் அல்லது பயன்பாடு இப்போது தேவைப்படுகின்றது என்பது அர்த்தம்.
இந்த மண்ணை இயற்கை சீரழிக்கவில்லை. மனிதன்தான் சீரழித்துக்கொண்டிருக்கின்றான்.
சகல வளமும் கொண்டது எங்கள் நாடு. அதைப்போல எமது மாகாணமும் சகல வளங்களையும் காலநிலையையும் கொண்டிருக்கின்றது.
அப்படியான எமது மாகாணத்தில் விவசாயிகள் தங்களை இன்னமும் ஏழை விவசாயிகள் என்று விளித்துக்கூறிக்கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டும்.
அவர்களுக்கு நவீன முறைமையிலான விவசாயத்தை அறிமுகப்படுத்தவேண்டும். அவர்களின் உற்பத்தியையும், அதன் தரத்தையும் ஊக்குவிக்கவேண்டும்.
அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது கண்மூடித்தனமாக எதிர்க்கின்றார்கள்.
அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது ஆகக்குறைந்த சூழல் பாதிப்பு இருக்கும். அதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைத்து நாம் செய்யவேண்டும். அதைவிடுத்து எல்லாவற்றையும் எதிர்க்கும் மனநிலையில் நோக்கிக் கொண்டிருந்தால் நாம் முன்னேற முடியாது.
அதிகாரிகளுடன் போராடவேண்டியிருப்பதாக அமைச்சர்களே கூறியிருக்கின்றனர். அது உண்மைதான். பல அதிகாரிகள் பிழையானவற்றுக்கு பழகிவிட்டார்கள். அவர்களை அதிலிருந்து மாற்றுவதற்கு பாடுபடவேண்டியிருக்கின்றது.
எங்கள் வடக்கு மாகாணமும் அதிலிருந்து விதிவிலக்கானது அல்ல. நேர்மையானவர்கள் பழிவாங்கப்படுகின்றார்கள் அல்லது பந்தாடப்படுகின்றார்கள். அதைப்போலத்தான் வசதிபடைத்த – செல்வாக்கானவர்கள் அரச திணைக்களங்களுக்கு வந்தால் அவர்களுக்கு மரியாதையுடன் விரைந்து சேவை வழங்கும் அதிகாரிகள், ஏழை எளிய மக்கள் வந்தால் அலைக்கழிக்கின்றனர். இந்த நிலைமை மாறவேண்டும்.
புதிய அரசாங்கம் மக்கள் நேய சேவையைக் கொண்டு செல்லவே விரும்புகின்றது. அரச அதிகாரிகள் அதற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும், என்று ஆளுநர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலர் ஆ.சிறி ஆகியோர் கலந்துகொண்டனர். உலக மண் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.