2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் முதல் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகளை வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் கசியப்பட்டதையடுத்து பெற்றோர்கள் சிலர் அடிப்படை மனித உரிமை மனுக்களை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், பரீட்சை வினாத்தாளின் முதல் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகளை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என தீர்ப்பளிக்குமாறு கூறி மனுதாரர்கள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மனுதாரர்களின் கோரிக்கையைப் பரிசீலித்த யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
மேலும், இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழுவினால் முன்வைக்கப்பட்ட மூன்று பரிந்துரைகளில் ஒன்றை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.