“எமது அரசு பதவியேற்று 3 மாத காலத்துக்குள் நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது. இடைநிறுத்தப்பட்ட பல வெளிநாட்டு அபிவிருத்தி கருத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிலையாக ஸ்திரத்தன்மையை நோக்கிய பாதையில் இலங்கை நகர்கின்றது என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் எம்மால் நல்லதொரு நிலையை அடைய முடியும்.” – இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாம் திட்டமிட்ட வகையில் முறையாக எமது அபிவிருத்தி கருத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். ஆட்சிக்கு வந்தோம் செய்தோம் என எம்மால் நடந்துகொள்ள முடியாது. நாம் நிறைவேற்ற வேண்டிய பல விடயங்கள் உள்ளன.
கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்கள் காரணமாகவே இந்த நாடு இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனினும், முறையாகவும் திட்டமிட்ட வகையிலும் நாட்டைக் கட்டியெழுப்பவே மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். வளமான எதிர்காலத்துக்காக எமக்கு இந்த மக்கள் ஆணை கிடைத்துள்ளது.
2025 ஆம் ஆண்டு முதல் திட்டமிட்ட வகையில் முறையாக எமது அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்கான தலைமைத்துவத்தை நாம் வழங்குவோம். இதற்காக அரச சேவையில் உள்ள அனைவரும் எமக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நாம் நம்புகின்றோம்.
இந்த நாட்டைக் கட்டியெழுப்ப அரசியல் தலைமைத்துவம் மற்றும் அரச அதிகாரிகள் ஆகிய இரு தரப்பினரும் ஒரு நோக்கத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் என அனைவரும் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக உள்ளனர். எனவே, அவர்களுடன் இணைந்து நாட்டின் சுபீட்சத்துக்காக அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம்.” – என்றார்.