“வவுனியாவில் பெரும் காடுகளில் ஏக்கர் கணக்கான காணிகளில் இராணுவம் முகாம் அமைத்துள்ளது. ஆனால், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை அமைப்பதில் மாத்திரம் திணைக்களங்கள் அக்கறையில்லாமல் செயற்படுகின்றன.” – என்று வவுனியா ஒருங்கிணைப்புக் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
வவுனியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதன்போது, வவுனியாவில் மேய்ச்சல் தரை இல்லாமல் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்வதாகக் கவலை தெரிவித்தனர். மழைக் காலங்களில் அதன் நிலைமை மேலும் மோசமடைவதுடன் பால் உற்பத்தியும் வீழ்ச்சியடையும் நிலை காணப்படுகின்றது.
இராணுவம் பெரும் காடுகளில் பல ஏக்கர் கணக்கான காணிகளைப் பிடித்து முகாம் அமைத்துள்ளது. ஆனால், நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்களிக்கும் கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரை வழங்குவதில் அதிகாரிகள் பின் வாங்குவதாகப் பொதுமக்கள் குற்றம் சுமத்தினர்.
குளத்தின் அலைகரைப் பகுதிகளில் மேய்ச்சல் தரை அமைப்பது தொடர்பாக ஆராயுமாறும், அரச காணிகளை அடாத்தாகப் பிடித்து வைத்திருக்கும் நபர்களிடம் இருந்து அந்தக் காணிகளைப் பறித்து மேய்ச்சல் தரை அமைப்பது தொடர்பாகப் பரிசீலிக்க முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் இதன்போது தெரிவித்திருந்தார்.