யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும் சாவகச்சேரி நகர வர்த்தகர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் சாவகச்சேரியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
சாவகச்சேரி நகர சபையினால் புதிதாக அமைக்கப்பட்ட கடைத் தொகுதிகள் அண்மையில் குத்தகைக்கு வழங்குவதற்காக பகிரங்க கேள்வி கோரப்பட்டிருந்தது.
குறித்த கேள்வி கோரலினால் உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் ஏற்கனவே வியாபார நிலையங்கள் வைத்திருந்து யுத்தத்தினால் வியாபார நிலையங்கள் முற்றாக அழிவடைந்த வர்த்தகர்ளும் தங்களுக்கும் வர்த்தக நிலையங்களை வழங்க வேண்டும் என்று கோரியும் சாவகச்சேரி நகர சபை முன்றலில் முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் முன்னாள் பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன் ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனை அடுத்து குறித்த கேள்வி பத்திரத்தை திறப்பதனை உறங்கு நிலையில் வைக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளரினால் நகராட்சி மன்ற செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சாவகச்சேரி நகர வர்த்தகர்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இன்றைய தினம் சாவாச்சேரி நகரப் பகுதிக்கு வருகை தந்திருந்தார்.
இதன் போது சாவகச்சேரி வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், முன்னாள் நகரசபை உறுப்பினர் கிஷோர், முன்னாள் பிரதேச சபை உபதவிசாளர் மயூரன் மற்றும் பொதுமக்கள் இணைந்து நகர சபையின் தன்னிச்சையான செயல்பாடுகளால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்ற விடயத்தை சுட்டிக் காட்டியதோடு நகர சபை எந்தவிதமான திட்டமிடலமின்றி நகருக்குள் வர்த்த நிலையங்களையும் கட்டிடங்களையும் அமைப்பதனையும் பாராளுமன்ற உறுப்பினருக்கு நேரடியாக ச கொண்டு சென்று காட்டி இருந்தனர்.
குறித்த விடயங்கள் தொடர்பாக வர்த்தகர்கள் பொதுமக்களின் கோரிக்கையினை மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன் ஊடாக உரிய திணைக்களங்களுக்கு அறிவுறுத்தி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த முறையில் வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்ற உறுதி மொழியை பாராளுமன்ற உறுப்பினர் வழங்கியிருந்தார்.