மஸ்கெலியாவில் இயங்கும் பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி நிறுவனம் (சிப்ஸ்) வீட்டு வன்முறை தொடர்பான வேலைத்திட்டங்களை கடந்த ஒரு வருடமாக இப்பகுதியில் உள்ள தோட்ட மக்களுக்கு முன்னெடுத்து வந்ததுடன், அதன் அனுபவ பகிர்வு தொடர்பான செயற்பாடுகளை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சிவில் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு கடந்த காலங்களில் செய்து வந்தது.
குறிப்பிட்ட செயற்பாடானது இன்று 27.12.2024 தொடர்புபட்ட பங்குதாரர்களுடன் தகவல் பகிர்வு நடாத்தும் செயற்பாடு மஸ்கெலியா தமரா மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் ஏற்கனவே பயிற்சி பெற்ற வன்முறை தடுப்பு குழுவினர், தொண்டர்களாக செயற்படுபவர்கள், அரச மட்ட அதிகாரிகள், பொலிஸ் மற்றும் பாடசாலை அதிபர்கள் உட்பட சிப்ஸ் நிறுவனத்தின் உத்தியோகஸ்தர்கள் என 100 பேர் கலந்து கொண்டனர்.
குறித்த செயலமர்வில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் குறிப்பிட்ட வேலைத்திட்டத்தின் நோக்கம் மற்றும் இதுவரை முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் மற்றும் இந்த நடவடிக்கையின் முக்கியத்துவம், எதிர்பார்ப்புகள் போன்றவை தொடர்பாக பங்குபற்றுனர்களுக்கு தெளிவுபடுத்தினார். தொடர்ந்து கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளான குடும்ப வன்முறை என்றால் என்ன? வன்முறையின் வடிவங்கள், அது எவ்வாறு நடைபெறுகின்றது, தோட்ட தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் வன்முறைகள், பொருளாதார ரீதியாக முகம் கொடுக்கும் வன்முறைகள், கணவன் மனைவிக்கு இடையே ஏற்படுகின்ற வன்முறைகள், பாலியல் ரீதியாக நடைபெறும் வன்முறைகள், குடும்ப வன்முறைகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதற்காக நாடவேண்டிய நிறுவனங்கள் மற்றும் குடும்ப வன்முறையை தடுப்பதற்காக நிறுவனங்களாக செயற்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது.
தொடர்ந்து நிகழ்விற்கு வருகை தந்திருந்த முன்னாள் உயர்ஸ்தானிகரான ஓய்வுபெற்ற பெ.செல்வராஜ், பொலிஸ் அதிகாரி, சட்டத்தரணி ஏ.செல்வராஜ், ஓய்வு நிலை அதிபர் எஸ்.பி.பரமேஸ்வரன் மற்றும் அரச திணைக்கள உத்தியோகஸ்தர்கள் தமது கருத்துக்களை முன்வைத்ததுடன், வன்முறை தொடர்பான விடயங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறான விடயங்களை கையாள வேண்டும் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவது எவ்வாறு போன்ற விடயங்களுடன் உதவிகளை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாகவும் வருகை தந்திருந்தவர்களுக்கு தெளிவுபடுத்தினார்கள்.