20 ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் பொதுமக்களின் பங்களிப்புடன் இன்று 26.12.2024 காலை 9.00 மணி அளவில் மூதூர் இறங்குதுறைமுக வாசலில் சுனாமி நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் 2004.12.26 ஆம் திகதி சுனாமி ஆழிப்பேரலையினால் மூதூர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மரணித்த ஆத்மாக்களுக்கான நினைவஞ்சலியும் மற்றும் சமய அனுஷ்டானங்களும் இடம்பெற்றது. மேலும் இரத்ததான முகாம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி நினைவு தினத்தில் முதன்மை அழைப்பாளராக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி கலந்து சிறப்பித்ததோடு மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் கே.சுகுணதாஸ், சமூக நிறுவன உறுப்பினர்கள், சர்வமதத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.
மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் அவர்களின் புத்தாக்கமான சமூகவியல் செயற்பாடுகள் உண்மையில் பாராட்டத்தக்கது. குறிப்பாக இலக்கியம், சமூக அபிவிருத்தி மற்றும் சகவாழ்வு தொடர்பாக மக்களை மையப்படுத்திய வேலைத்திட்டங்களை சமூக நிறுவனங்களின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தி அரச நிறுவனத்தினது சமூகம் சார்ந்த இயங்கியலை உறுதி செய்து வருகின்றார்.