சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் நேற்று முன்தினம் 24 ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரை வழங்கும் பிரதான ஓயா வான கெசல்கமு ஓயாவில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜநாயக்க தெரிவித்தார்.
நோர்வூட் வெஞ்சர் பகுதி ஊடறுத்து வரும் கெசல்கமு ஓயாவில் ஒரு சிலர் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நோர்வூட் பொலிஸார் அங்கு சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வரையும் கைது செய்ததுடன் ஜெனரேட்டர், ஏனைய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாணிக்கக் கல் அகழ்வில் உள்ள குழியில் இருந்து நீரை அகற்றி இல்லங்கள் உடைத்து கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கம்பளை, இரத்தினபுரி, பொகவந்தலாவ பிரதேசத்தை சேர்ந்த 35, முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
இவர்கள் நால்வரும் பிணையில் விடுதலை செய்து எதிர்வரும் 31ஆம் தேதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும்படி பணிக்கபட்டுள்ளனர்.