“இது மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் மக்களால் நிறுவப்பட்ட அரசு. இது எவராலும் அசைக்க முடியாத தேசிய மக்கள் சக்தி அரசு. எனவே, இந்த அரசு கவிழும் என்று எதிரணியினர் கனவில் கூட நினைக்கக்கூடாது.” – இவ்வாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிரணியினர் முன்வைத்து வரும் விமர்சனங்கள் தொடர்பில் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள். அந்த மக்களே எம்மை ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளார்கள். மக்கள் ஆணைக்கு மதிப்பளித்துச் செயற்படுவது எமது பிரதான கடமை. மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எமது பிரதான குறிக்கோள்.
ஆளும் தரப்பினரின் கல்வித் தகைமை பற்றி கேள்வி எழுப்பும் எதிரணியினர், முதலில் தங்கள் கல்வித் தகைமையைப் பரிசோதிக்க வேண்டும்.
பொய்களைச் சொல்லி நாம் ஆட்சிக்கு வரவில்லை. நாம் நேர்மையுடன் நடந்தபடியால்தான் மக்கள் எம்மை ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள்.
மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம். இனிமேல் இன, மத, மொழி ரீதியில் பிரச்சினைகள் வர இடமளியோம்.” – என்றார்.