சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் நேற்றுமுன்தினம் (23) இடம்பெற்ற தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இணுவில் பகுதியில் அயலில் உள்ள இரண்டு குடும்பங்கள், தங்கள் தங்கள் வீட்டில் இரண்டு கோயில்களை ஆதரித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு குடும்பத்திற்கும் இடையே முரண்பாடு இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் பாதிக்கப்பட்ட குறித்த சிறுவன் பூ பறிப்பதற்காக வீதியில் சென்றுகொண்டிருந்தவேளை அயல் வீட்டு இளைஞன் குறித்த சிறுவனுடன் முரண்பட்டு விட்டு தாக்குதல் நடாத்தியுள்ளார். இதன்போது சிறுவன் தனது வீடு நோக்கி ஓடிவந்தவேளை தாக்கிய இளைஞனும், அவரது தந்தையும் சிறுவனை துரத்திக்கொண்டு வந்தனர்.
இதன்போது தனது மகனின் அழுகை குரலை கேட்ட தந்தை எழுந்து வீட்டுக்கு வெளியே வந்தவேளை கொட்டனுடன் வந்த இளைஞனும், தந்தையும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டனர். இந்நிலையில் அவர் மயங்கி கீழே விழுந்தபோது அவரது மனைவி ஓடி வந்தவேளை அவர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டது. குறித்த பெண் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்து மூன்று மாதங்களே நிரம்பிய நிலையில் அவரது வயிற்றில் தாக்குதல் நடாத்தப்பட்டது. தனது மகள் மீது தாக்குதல் நடாத்துவதை தடுப்பதற்கு வந்த தாய் மீது தாக்குதல் நடாத்தப்பட்டவேளை அவரும் படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் படுகாயமடைந்த மாமியாரும் மருமகனும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், தனது ஏனைய பிள்ளைகளை வீட்டில் இருந்து கவனிக்க யாரும் இல்லாத காரணத்தினால் குறித்த குடும்பப் பெண் வைத்தியசாலைக்கு செல்லாமல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.