பருவ காலத்தில் சுத்தமான குடிநீர் யாத்திரீகர்களுக்கு வழங்கும் திட்டத்தை கடந்த பௌர்ணமி நாளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான கௌரவ திலிப் ஜயவர்தன மற்றும் சிவனடி பாத மலைக்கு பொறுப்பான தேரர் பெங்கமுவே தம்ம தின்ன ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களுக்கும் சுத்தமான குடிநீரை பணம் இன்றி பெற்றுக் கொள்ளவும் பிளாஸ்டிக் பாவனையில் இருந்து விடுபடவும் சுமார் ஒரு கோடி ரூபா செலவில் இந்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்கு கடந்த பௌர்ணமி நாளில் கையளிக்கப்பட்டது.
இந்த வேலைத் திட்டத்தை தர்ம்ம சுகந்த மனுசத் பதனம என்ற நிறுவனத்தின் தலைவர் சுஜித் விக்கிரம ரத்ன அவர்கள் சிவனடி பாத மலைக்கு வரும் யாத்திரீகர்கள் நலன் கருதி மிகவும் அர்ப்பணிப்புடன் ஆரம்பித்து வைத்தார்.
இந்த வேலைத் திட்டம் சிவனடி பாத மலை அடி வாரமான சியத கங்குல பகுதியில் இருந்து மலை உச்சி வரை குடிநீரை பெற்றுக் கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் பிளாஸ்டிக் போத்தல்கள் தடுக்க முடியும் எனவும் சுற்றுச்சூழலை காப்பாற்ற முடியும் என சுற்றுச்சூழல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொட்டும் மழையில் இந்த வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.