காலி-கொழும்பு பிரதான வீதியில் தடல்ல மயானத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை (20) மாலை தம்பதியினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 38 வயதான மெலேகொட வஞ்சவல படபெந்திகே பத்தும் என்ற ‘லோக்கா’ என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,
காலி-கொழும்பு பிரதான வீதியில் தடல்ல மயானத்திற்கு அருகில் தம்பதியினர் உந்துருளியில் பயணித்துள்ளனர். இதன்போது, உந்துருளியில் வந்த இருவர் உந்துருளியில் சென்று கொண்டிருந்த தம்பதியினர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதில் படுகாயமடைந்த கணவன் உடனடியாக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது அவருடன் பயணித்த அவரது மனைவியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.