குருநாகல் கொபேய்கனே பகுதியில் தெதுறு ஓயா ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த 14 வயதான சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
கொபேய்கனே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெதுறு ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த இரு சிறுமிகள் ஆற்றின் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். எவ்வாறெனினும், நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி ஒருவர் கரையொதுங்கி உயிர் தப்பியுள்ளதுடன் மற்றைய சிறுமி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல்போன சிறுமி 14 வயதுடைய கொபேய்கனே பகுதியை சேர்ந்தவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறுமி உட்பட மேலும் பல சிறுவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் தெதுரு ஓயாவை பார்வையிடுவதற்காக சென்றுள்ளதாகவும் இதன்போது ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த நிலையில் அனர்த்தத்துக்குள்ளாகியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
இதேவேளை நிக்கவரெட்டிய சுழியோடி படைப் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிஸார் காணாமல்போயுள்ள சிறுமியை தேடும் பணியை தொடர்ந்து முன்னெடுத்து வருவதுடன் இச்சம்பவம் தொடர்பில் கொபேய்கனே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.