பொதுச்சபையும், பொதுச் செயலாளரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல், சர்வதேச விசாரணை குறித்து தீர்க்கமான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பரிந்துரைக்க வேண்டும் என்றும் எமது மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் தனது நட்பு நாடுகளின் ஊடாக கனடா இதற்கு ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எனது மக்கள் சார்பாக வேண்டிக்கொள்கின்றேன்.3. புதிய அரசமைப்பு காத்திரமாக மேற்கொள்ளப்படுவதற்குரிய புதுமையான சர்வதேச மத்தியஸ்துவத்தை ஏற்படுத்த ஆவன செய்தல்.புதிய அரசமைப்பு ஒன்றின் ஊடாக இனப் பிரச்சினைக்கான தீர்வு காணப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் பெரும்பாலும் ஒத்துக்கொண்டிருந்தாலும், அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படுகின்றபோது, அது மீண்டும் இறுக்கமான ஒற்றையாட்சித் தன்மை கொண்ட ஒன்றாக அமைந்துவிடும் ஆபத்து உள்ளது என்ற அச்சம் பரவலாகத் தமிழ் மக்களிடையே வேரூன்றியுள்ளது. கடந்த கால அனுபவத்தோடு நோக்குகையில் இது நியாயமான அச்சமே.இவ்வாறான சிக்கலுக்கு மீண்டும் மீண்டும் நாம் ஆளாகாது இருக்கவேண்டுமாயின் தீவிலுள்ள தத்தமக்கான இறைமைக்கும் முழுமையான சுயநிர்ணய உரிமைக்கும் பரிகார நீதிக்கும் உரித்துடைய தேசங்களுக்கும் ஏனைய மக்களுக்கும் இடையே கூட்டு உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசமைப்புக்கு முன்னரான சமூக ஒப்பந்தம் ஒன்று சர்வதேச மத்தியஸ்தத்தோடு மேற்கொள்ளப்பட்டு, அதன் தொடர்ச்சியாக அரசமைப்பு உருவாக்கப்படுவதே பொருத்தமாக இருக்கும்.இது தொடர்பில் கனடா முன்னுதாரணமான ஆட்சிமுறையைக் கொண்ட ஒரு நாடாக விளங்குகிறது. கியூபெக் மாகாணத்தின் ஒரு தலைப்பட்சமாகப் பிரிந்து செல்லும் உரிமை தொடர்பாக 1998 ஆம் ஆண்டு கனடிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகிய பின்னர் தெளிவுபடுத்தற் சட்டம் என்பதை 2000 ஆம் ஆண்டில் கொண்டுவந்து கூட்டாட்சி அலகுகளான மாகாணங்களுக்கான சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட பொதுவாக்கெடுப்பை எவ்வாறு நடாத்தவது என்பதைத் தெளிவுபடுத்திய அரசியலமைப்பைக் கொண்டுள்ளது. இந்தவகையில் கனடா நாட்டின் கூட்டாட்சி முறை எமக்கு நம்பிக்கை தரும் ஒரு முன்னுதாரணம் ஆகும். இதைப் போன்ற ஒரு தீர்வை இலங்கைத் தீவிலும் ஏற்படுத்தும் வகையில் ஊக்கமூட்டும் சர்வதேச ஒழுங்குகளைக் கனடிய அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் பணிவோடு வேண்டுகின்றேன்.நல்லிணக்க நடவடிக்கைகளையும் பொருளாதார ரீதியான முன்னெடுப்புகளையும் ஒன்றோடு ஒன்று இணைந்ததாகப் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தமது பூர்வீகத் தாயகத்தோடு மேற்கொள்வதற்கு ஏதுவாக மேற்குறித்த பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு ஆகியன இன்றியமையாத முதற்கட்ட நடவடிக்கைகள் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன். அவர்களின் மகிழ்வான உள நலத்துக்கும் இது நன்மை பயக்கும். பொறுப்புக்கூறலும் அநீதிகள் மீளநிகழாமையும் உறுதிப்படுத்தப்பட்டாலே உரிமையோடு அடுத்த கட்ட பொருளாதார நல்லிணக்க நகர்வுகள் ஆரோக்கியமாக இடம்பெறும் சூழல் எமது தீவில் உருவாகும் என்பதையும் தங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன். தங்களைச் சந்தித்து இந்தக் கோரிக்கைகளைக் கையளிக்கும் வாய்ப்பை எனக்கு அளித்தமைக்கு கனடிய வெளிவிவகார அமைச்சுக்கு மன நிறைவோடு எனது மனமார்ந்த நன்றிகள்.” – என்றுள்ளது.