வன்னிப்பகுதியில் குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் அதிகமாக இடம்பெறும் யானை – மனித மோதல் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று (18.12.2024) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
அவர் தனது உரையில்,
பொருளாதாரத்தில் வன்னி மாவட்டம் ஏனைய மாவட்டங்களை போலவே, விவசாயத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு வாழும் விவசாயிகள் யானைகளின் தொல்லையினால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றார்கள். கடந்த மாதம் எமது மாவட்டத்தில் மாத்திரம் 11 பேர் யானைத்தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்திருகின்றார்கள். ஆகவே எமது பகுதிகளுக்கு யானை வேலி அமைப்பதற்கான நிதியினை அரசாங்கம் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கீழ்மல்வத்து ஓயா திட்டம் வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. அந்த திட்ட முன்மொழிவில் யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கீழ்மல்வத்தோயா திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால் திட்டப் பிரதேசத்தில் இருந்து யானைகள் ஏனைய பிரதேசங்களிற்கு இடம்பெயரவேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் தற்போதுள்ள யானை-மனித மோதல் நிலைமையானது மிக மோசமடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரையில் இவ்விடயம் தொடர்பில் அரசினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். என்றார்.