கிளிநொச்சி மாவட்ட பெண்கள் தேசிய நிலையத்தினால் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு நேற்று(18) நடைபெற்றது.
வலுவூட்டல் மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல் செயற்றிட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட 10 தொழில் முயற்சியாளர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இன்றைய தினம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நான்கு பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஏனையவர்களுக்கு அந்தந்த பிரதேச செயலகங்கள் ஊடக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பெண்கள் தேசிய நிலைய பிரதிப் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார்.
பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அதன் மூலம் நாளாந்தம் தங்களது ஜீவனாம்சத்தை கொண்டு செல்லவும் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் செயற்படுகின்ற இலங்கை பெண்கள் பணியகமானது பெண் தலைமை தாங்கும் மற்றும் கணவனை இழந்த பெண்களினுடைய மேம்படுத்தலுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் தேசிய நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தனர்.