மும்பை கடற்கரையில் புதன்கிழமை (18) மாலை அதிவேகமாக வந்த கடற்படை படகு ஒன்று பயணிகள் படகின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்ததோடு, 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் தேடுதல் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கேட்வே ஆஃப் (Gateway of India) இந்தியாவிலிருந்து மும்பை நகரத்தின் துறைமுகத்திற்கு கிழக்கே அமைந்துள்ள எலிபெண்டா தீவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற படகே நேற்று மாலை 4.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மும்பையின் கேட்வே ஒப் இந்தியா (Gateway of India) பகுதியிலிருந்து எலிபென்டா தீவு நோக்கி 100ற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன், நேற்று மாலை படகு ஒன்று புறப்பட்டது. அந்த வழியாக வந்த கடற்படையின் ரோந்து படகு ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது அதிவேகமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் நான்கு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் கடற்படை வீரர் ஒருவரும் கடற்படை கப்பலில் இருந்த மேலும் இருவருமே அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
101 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.