திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்றைய தினம் அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை கங்கைபுரத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான வெள்ளசாமி ஜெயகுமார் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அருகாமையில், கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த இரவு நேர ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் கொட்டகலை புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக புகையிரத நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
குறித்த நபர் உயிர்மாய்த்துக் கொண்டாரா? அல்லது புகையிரதத்தில் மோதுண்டு இறந்தாரா? என்பது தொடர்பாக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.