“வரும் 2028 ஆம் ஆண்டிலும் எம்முடைய அரசே ஆட்சியமைக்கும்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்துக்கு நேற்று வருகை தந்த ஜனாதிபதி, விசேட உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் 2028 ஆம் ஆண்டில் கடனைச் செலுத்த வேண்டியுள்ளதால் மீண்டும் எம்முடைய நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்லும் என்ற கருத்தை விதைக்க எத்தனிக்கின்றனர். எதிர்வரும் 2028 ஆம் ஆண்டும் எம்முடைய அரசே ஆட்சியமைக்கும். ஆகவே, 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்பட நாம் இடமளிக்கப்போவதில்லை.
2028 ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டுக் கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசின் நோக்கமாகும்.
நாம் ஆட்சிக்கு வரும்போது அரசு சர்வதேச நாணய நிதியத்துடன், இரண்டாவது மீளாய்வைச் செய்திருந்தது. அதனை அடுத்து மூன்றாவது மீளாய்வை நாம் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து முன்னெடுத்தோம். அதன்போது இரண்டாம் மீளாய்வில் இணங்கிய பல விடயங்களில் திருத்தங்களை எம்மால் மேற்கொள்ள முடிந்தது.
உழைக்கும்போது அறவிடும் வரி தொடர்பில் துறைசார் நிபுணர்கள் மத்தியில் விரக்கதி காணப்பட்டது. அது தொடர்பில் நாம் கவனம் செலுத்தினோம். அதற்கமைய மூன்றாம் மீளாய்வின்போது சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.
அத்துடன், உழைக்கும்போது அறவிடும் வரி ஒரு இலட்சம் என்ற வரையறையை நாம் ஒன்றரை இலட்சம் என அதிகரித்துள்ளோம்.
இதற்கமைய ஒன்றரை இலட்சம் மாத வருமானம் பெறுபவர்களுக்கு 100 வீதி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கூடிய வருமானம் பெறுபவருக்குக் குறைந்த சலுகையும், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அதிக நிவாரணம் கிடைக்கும் வகையிலும் உழைக்கும்போது அறவிடும் வரியில் திருத்தம் மேற்கொண்டுள்ளோம்.” – என்றார்.