கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் இரத்தினசேகரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநருக்கு இன்று (17) சமர்ப்பித்துள்ள கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
கிண்ணியா கல்வி வலயம் 68 பாடசாலைகளையும், சுமார் 24 ஆயிரம் மாணவர்களையும் கொண்டது. இங்கு அனுமதிக்கப்பட்ட இலங்கை கல்வி நிர்வாக சேவை ஆளணி 20 ஆகும். ஆனால் தற்போது 3 இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் மட்டுமே இங்கு கடமை புரிகின்றனர்.
இதனால் கிண்ணியாவின் கல்வி நிர்வாகம் மிகவும் பின்னடைந்து காணப்படுகின்றது. இது மாணவர்களின் கற்றலில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை இருந்தாலும் சில வலயங்களில் 10 பேர் வரை பணி புரிகின்றனர். மாகாணத்தில் இருக்கின்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சரியாகப் பகிரப்படாமையே இதற்குக் காரணமாகும். இதனால் கிண்ணியா வலயம் மாகாணக் கல்விப் பகுதியினரால் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதான குற்றச்சாட்டுக்களும் உள்ளன.
எனவே, தயவு செய்து இவ்விடயங்களைக் கவனத்தில் கொண்டு கிழக்கு மாகாணத்தில் கடமையில் இருக்கின்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளை சரியாகப் பங்கீடு செய்து கிண்ணியா வலய இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் பற்றாக்குறையை ஓரளவு குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.