திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற 39 வயதான பெண் ஒருவர் சன நெரிசலில் சிக்கி
உயிரிழந்ததுடன் அவரது மகன் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் நடிகர் அல்லு அர்ஜூன் ஹைகராபாத்தில் உள்ள குறித்த திரையரங்குக்குச் சென்ற நிலையிலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன், அவரது பாதுகாப்பு குழுவினர் மற்றும் சம்பவம் இடம்பெற்ற திரையரங்கின் நிர்வாக பணியாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த தரப்பினர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நடிகர் அல்லு அர்ஜூனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் பின்னர் மேல் நீதிமன்றினால் அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், திரையரங்குக்கு வருவது தொடர்பில் அவர், தங்களுக்கு அறிவிக்கவில்லை என திரையரங்கின் நிர்வாகத்தினர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தினர்.