2024 ஆண்டு முழுவதும் உலகின் பல பகுதிகளில் 104 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் காஸாவில் உயிரிழந்ததாக சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையானது ஊடகவியலாளர்களின் மரண ஆண்டாக வரலாற்றில் பதிவான 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் குறைவு என சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு 129 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் என சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி செய்தி நிறுனத்திடம் கூறினார்.
இவ்வாண்டு கொல்லப்பட்ட 55 பேர் பாலஸ்தீன ஊடகவியலாளர்கள், காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட மோசமான தாக்குதல்களின் விளைவாக அந்த மரணங்கள் நிகழ்ந்ததாக சம்மேளனம் குறிப்பிட்டது.
2023 அக்டோபர் 7ல் இஸ்ரேல் – காஸா போர் தொடங்கியது முதல் இதுவரை 138 பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது
மத்திய கிழக்கிற்குப் பிறகு ஊடகவியலாளர்களுக்கு மிக மோசமான வட்டாரமாக ஆசியா அமைந்திருப்பதாக அது கூறியது. ஆசியாவில் இவ்வாண்டு 20 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் ஆறு பேரும் பங்ளாதேஷில் ஐவரும் இந்தியாவில் மூவரும் கொல்லப்பட்டதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.