அரசியலமைப்பு பேரவைக்கான பிரதிநிதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பு பேரவையின் தலைவராக சபாநாயகர் செயற்படுவார்.
பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இதில் நிரந்தர உறுப்புரிமையை பெற்றிருப்பர்.
பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மேலும் ஒவ்வொருவரது பெயரை முன்மொழியலாம்.
அதன்படி ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடிளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதிநிதியாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேராவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன் சிறுகட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக கட்சி சாராத மூன்று சிவில் பிரதிநிதிகளுக்கு இடமளிக்கப்பட வேண்டும்.
அத்துடன் அரசியலமைப்பு பேரவையின் ஜனாதிபதியின் பிரதிநிதி இன்னும் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பு பேரவை
அரச சேவையில், அரசியல் தலையீடுகளை தவிர்த்து, சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்பின் மூலம் அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டது.
அரசியலமைப்பு பேரவையினால் பின்வரும் ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்படும்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு
தேசிய பொலிஸ் ஆணைக்குழு
மனித உரிமைகள் ஆணைக்குழு
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு
அரச சேவை ஆணைக்குழு
நிதி ஆணைக்குழு
கணக்காய்வு ஆணைக்குழு
தேசிய பெறுகை ஆணைக்குழு
எல்லை நிர்ணய ஆணைக்குழு
அத்துடன், பின்வரும் நியமனங்களை அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடனேயே ஜனாதிபதி நியமிக்க வேண்டும்.
பிரதம நீதியரசர்
உயர் நீதிமன்ற நீதியரசர்கள்
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், அதன் நீதியரசர்கள்
சட்ட மாஅதிபர்
பொலிஸ் மாஅதிபர்
கணக்காய்வாளர் நாயகம்
ஒம்புட்ஸ்மன்
நாடாளுமன்ற செயலாளர் நாயகம்