நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் இன்றைய தினத்தில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று விருத்தியடையக்கூடும். இது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியை அடைந்து மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து எதிர்வரும் 12 ஆம் திகதியளவில் தமிழ் நாட்டுக் கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் கடல் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும், கடல்சார் ஊழியர்களும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்வு கூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.