வங்காளவிரிகுடாவில் 07/12/2024 க்குப் பிறகு உருவாகவுள்ள வெப்பமண்டலத் தாழமுக்கமானது தற்போதுள்ள 60% வரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது இலங்கைக்கு அருகால் தனது நகர்வைத் தொடரவுள்ளதால் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 11/12/2024 தொடக்கம் 16/12/2024 வரையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 12/12/2024 மதியம் தொடங்கி அடுத்தநாள் காலைவரை முழுநேர மழை தொடரும் என்று கணிக்க முடிகிறது. குறித்த காலம் வெள்ளப்பேரிடர்/ நீர்வெளியேறாத காலப்பகுதியாகவும் இருத்தல்கூடும்.
வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களும் தமிழகத்தின் சென்னை முதற்கொண்டு திருச்சிராப்பள்ளி வரையான பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசங்களும் எதிர்கொள்ளவுள்ளன.
முக்கியமான விடயங்கள்:
- கடலலைகளின் உயரம் 1 மீட்டர் வரை மேலெழுவதால் 7/12/2024 ம் திகதிக்குப் பிறகு ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவோர் இம்மாத இறுதிவரை அதனைத் தவிர்ப்பது நல்லது.
- பெரும்போகத்தில் வயல் விதைப்பினை இம்மாதம் 11 ம் திகதிக்குப் பின்னர் மேற்கொள்ள இருப்பவர்கள் அதனைத் பிற்போடல் அவசியமாகும்.
- வன்னியில் உடைப்பெடுத்த குளங்களின் பாதுகாப்பினை மீள உறுதிசெய்தலும் நீரேந்துப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஆலோசனை ஏற்படுத்தலும்.
- வவுனிக்குளத்தின் நீர்வரத்து மிக அதிகமாகி, பாலியாறு பெருக்கெடுக்க வாய்ப்புள்ளது. (வவுனிக்குளம் நீர்நிறைந்தால் பாலியாறு பெருக்கெடுக்கும் என்று நிலாந்தன் எழுதிய கவிதை ஒன்றும் உள்ளது) இதன் விளைவாக மன்னார் நாவற்குழி பிரதான வீதி தீவிர தாக்கத்திற்குள்ளாகும்.