இலங்கையில் இருந்து தப்பி பிரித்தானிய குடியுரிமை பெற்று, நாட்டில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்பிற்கு பணம் சேகரித்து கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் பணத்தை விநியோகித்த நபர் ஒருவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடைக்கு இணங்க இலங்கைக்கு வந்த போது கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் .
கிளிநொச்சி, பகுதியைச் சேர்ந்த 43 வயதான இவர், 2009ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்குத் தப்பிச் சென்று பிரித்தானியக் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.
பிரித்தானியாவில், இந்நாட்டில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்து, கொழும்பு மற்றும் வன்னி மாவட்டத்தில் இயங்கி வந்த அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு பணத்தை வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான முறைப்பாடுகள் கொழும்பு குற்றப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றதையடுத்து, அந்தப் பிரிவின் அதிகாரிகள் 31.05.2012 அன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்து அவருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்தனர்.