பெங்கல் புயல் நிலையை அடுத்து தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர்வழங்கல் குழாயில், வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் காரைதீவு, நிந்தவூர் மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களுக்கான குடிநீர் வழங்கல் கடந்த பல தினங்களாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரின் நெறிப்படுத்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவின் பங்கெடுப்புடன் இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ கூட்டத்தில் இடைத்தங்கல் முகாம்களுக்கு குடிநீரை வழங்குவதை முன்னிலைப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்தபோது ஜாஹீர் பௌண்டஷன் தவிசாளர் ஏ.எம்.ஜாஹீர் மற்றும் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர் ஆகியோர் மாளிகைக்காடு பிரதேச மக்கள் எதிர்நோக்கும் சவால்களை இந்த கூட்டத்தில் முன்வைத்து இரவோடிரவாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்டு கிராம சேவகர்களுடாக குடிநீரை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் காரைதீவு பிரதேச சபையின் உதவியுடன் மக்களுக்கு பாதுகாப்பான தூய குடிநீரை வழங்கும் பொருட்டு மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபை குடிநீர் வழங்கல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்ததுடன் பொதுமக்களுக்கு வீடுவீடாக சென்று குடிநீர்களை விநியோகித்தார்கள். இதுதொடர்பில் இங்கு ஆராய்ந்து இந்த செயற்பாட்டை மேலும் விஸ்தரிக்க தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை, காரைதீவு பிரதேச செயலகம் என்பன இணைந்து காரைதீவு மற்றும் மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கு புவுசர்கள் மூலமாக குடிநீர் வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அதனடிப்படையில், பிரதேச செயலகத்தின் உதவியுடன் காரைதீவு பிரதேச செயலத்திற்குட்பட்ட 10 இடங்களில் மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபை, ஜாஹீர் பௌண்டஷன், சமூக அபிவிருத்தி அமையம் ஆகியவற்றின் உதவியுடன் பாதுகாப்பான குடிநீர் தாங்கிகளை வைத்து, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பவுசர் மூலம் குடிநீர் வினியோக நடவடிக்கையை தொடர்ச்சியாக செயற்படுத்தி, கண்காணித்து வருகின்றது. தற்போது நிலவும் வெள்ள அனர்த்த சூழலில், இக்குடிநீர் வழங்கல் மூலம் சுமார் 1500 குடும்பங்கள் நன்மையடைந்து வருவதுடன், இச்செயற்பாடுகள் யாவும் காரைதீவு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், கிராம நிலதாரிகள் மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தரின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அனர்த்த முகாமைத்துவ கூட்டத்தில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய, மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர்கள், மாளிகைக்காடு அல்- ஹுசைன் வித்தியாலய சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் நலன்கருதி மாளிகா வீதியில் வெள்ளம் ஏற்படாது தடுக்கும் விதமாக சகல வடிகான்களும் உடனடியாக துப்பரவு செய்யவேண்டியம் அவசியம் தொடர்பிலும், மீனவர்களின் பிரதான பாதையான இந்த மாளிகா வீதியின் நிலைகள், வெள்ளத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் தொடர்பிலும் அல்-மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர் விளக்கி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.இதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா இங்கு உறுதியளித்தார்.