குளியாப்பிட்டிய – ஹெட்டிபொல வீதியில் கம்புராபொல புத்கமுவ பாலத்திற்கு அருகில் இன்று சனிக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடைய சகோதரர்கள் இருவர் ஆவர்.
குளியாப்பிட்டியவிலிருந்து ஹெட்டிப்பொல நோக்கிப் பயணித்த ஜீப் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி புத்கமுவ ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது ஜீப் வாகனத்தில் இருந்த சகோதரர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.