இலங்கை அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நிதியை பெறும் என வௌியுறவு அமைச்சர் அலிசப்ரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு அளித்த நேர்காணலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அமைச்சர்,
“1948 இல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து மோசமான நிதி நெருக்கடியைத் தூண்டிய அந்நியச் செலாவணி இருப்புக்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றது.
2022 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இலங்கை அதன் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.
இருதரப்பு கடன் மறுசீரமைப்பில் சுமார் 11 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதுடன், பத்திரப் பதிவுதாரர்கள் உட்பட அனைத்து முக்கிய கடன் வழங்குநர்களுடனும் மே மாதத்திற்குள் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
நெருக்கடியின் போது இடைநிறுத்தப்பட்ட முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களை மீள் ஆரம்பிப்பதில் கவனம் செலுத்தும் என்றும் இதில் நெடுஞ்சாலை, கொழும்புக்கு அருகிலுள்ள முக்கிய விமான நிலைய விரிவாக்கம் மற்றும் ஜப்பானுடன் 2 பில்லியன் அமெரிக்க டொலர் இலகு ரயில் திட்டம் ஆகியவை உள்ளடங்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அடுத்த 12 முதல் 24 மாதங்களுக்குள், திட்டங்களின் அடிப்படையில் மற்றும் சில அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் விற்பனையிலிருந்து சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயத்தை இலங்கைக்குள் வரவைப்பதற்கு எதிர்பார்க்கிறோம்” என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.