2024 பெரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நேற்றைய தினத்துடன் நிறைவுக்கு வந்தன. நேற்றைய நிறைவு நாள் நிகழ்வுகள் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றதுடன் இதில் பிரபல ஹொலிவூட் நடிகர் டொம் குருஸ் கலந்து சிறப்பித்திருந்தார். இசை நிகழ்ச்சிகளும், வான வேடிக்கைகளும் நிறைவு நிகழ்வை அலங்கரித்தன.
2028ல் ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்சில் இடம்பெறவுள்ளதை வெளிப்படுத்தும் வகையில் குறித்த நகரின் மேயர் கரன் பாஸிடம் ஒலிம்பிக் கொடி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அத்துடன் இம்முறை ஒலிம்பிக்கில் அனைத்து கண்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வகையில் அகதிகள் ஒலிம்பிக் குழு போட்டிகளில் பங்கேற்றது. குறித்த குழுவைச் சேர்ந்த வீரர் ஒருவரினால் ஒலிம்பிக் சுடர் அணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு வீரர்கள் மாத்திரமன்றி, நடிகர், இசைக் கலைஞர், அரசியல் தலைவர்கள் என பலரின் பங்கேற்பில் 2024 பெரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவுக்கு வந்தன.
இதேவேளை இம்முறை ஒலிம்பிக்கில் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலுள்ளது. 40 தங்கம் , 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலப் பதக்கங்களை அமெரிக்கா வென்றது. 40 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலப் பதக்கங்களை வென்ற சீனா இரண்டாம் இடத்தைப் பெற்றது.
ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பதக்கப்பட்டியலில் முறையே 3ம் , 4ம் , 5ம் இடங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.