அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்கோரி கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டமானது, அம்பாறை மாவட்டம், காரைதீவு சந்திக்கருகாமையில் ஆரம்பமானதுடன், பல்வேறு சுலோகங்களை ஏந்தி பட்டதாரிகள் கொளுத்தும் வெயிலில் கவனயீர்ப்புப் போராட்டத்தை அமைதியாக முன்னெடுத்தனர்.
இதன் போது, இதுவரை வேலைவாய்ப்பு தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லையெனவும் வெளிப்படையாக பட்டதாரிகளின் நிலைமை குறித்து தகவல்களை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
இக் கவனயீர்ப்புப் போராட்டமானது அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க உப தலைவர் சதாசிவம் யதுராஜ் தலைமையில் இடம்பெற்றதுடன், குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக ஏனைய வேலையற்ற பட்டதாரிகள் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோசங்களையும் எழுப்பி உரிய தரப்பினர் தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, குறித்த போராட்டத்திற்கு காரைதீவு பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஆர் எஸ்.ஜெகத் வருகை தந்துபார்வையிட்டதுடன், பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


