நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் இ.போ.ச பஸ்லில் மிதி பலகையில் தொங்கும் பாடசாலை மாணவர்கள்.
நுவரெலியா -தலவாக்கலை பிரதான வீதியில் காலை வேளை உரிய நேரத்துக்கு பஸ்கள் சேவையில் ஈடுபடாமையினால், அங்கிருந்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களும் தொழிலுக்கு செல்வோரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் மேலும் பாடசாலை மாணவர்கள் மிதிபலகையில் வெளியில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.
இவ்வீதியில் தினமும் சேவையிலிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் தொழில் புரியும் சாரதியோ அல்லது நடத்தினரோ விடுமுறை என்றால் சேவையில் ஈடுபடும் பேருந்தும் திடீரென முற்றாக நிறுத்தப்படுவதாகவும் , பேருந்தில் ஏதேனும் பழுது ஏற்படும் சமயத்திலும் பேருந்துக்கள் நிறுத்தபடுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் அவற்றில் தினமும் பயணிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள், அன்றாட தொழிலுக்குச் செல்வோர் சீரான பஸ் போக்குவரத்து இல்லாமல் அவதிப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கிலாரண்டன், டெஸ்போட், கிரிமிட்டி, வாழைமலை, அவோக்கா, கார்லிபேக் போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்களே போக்குவரத்துச் சிக்கலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இந்த பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளமையால், காலை 6.30 மணிக்கு தலவாக்கலையில் இருந்து நுவரெலியா நோக்கி புறப்பட்டு, காலை 7.20 மணியளவில் டெஸ்போட், கிரிமிட்டி வழியாக செல்லும் பேருந்தில் கூட்டம் நிரம்பிக் காணப்படுவதாகவும், அதில் ஏறி பயணம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்துவோர் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்தோடு இ.போ.ச பேருந்துக்கான மாதாந்த பருவச்சீட்டு பெற்றுக்கொண்டவர்கள் முச்சக்கரவண்டிகள் மற்றும் வேறு வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதில் கிலாரண்டன் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் நானுஓயா பிரதான நகருக்கும், நானுஓயா நாவலர் பாடசாலைக்கும் மூன்று நான்கு கிலோமீற்றர் தூரம் நடந்தே செல்கின்றனர். இதனால் உரிய நேரத்தில் பாடசாலைக்கோ அலுவலகங்களுக்கோ செல்ல முடியாமல் மீண்டும் தமது வீடுகளுக்கே செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இவ்வீதியில் காலையில் உரிய நேரத்துக்கு அரச பஸ்கள் சேவையில் ஈடுபடாமையால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலருக்கு தெரியப்படுத்தியும் ஊடகங்களில் பல்வேறு தடவைகள் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக் காட்டப்பட்டும் இதுவரை இந்த பிரச்சனை தீர்க்கப்படாத பிரச்சினையாகவே காணப்படுகிறது எனவும் பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
எனவே, இப்பிரதேச மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பாடசாலை நேரங்களில் சீரான பேருந்து சேவையை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.