பளைக் கோட்டத்திற்குட்பட்ட கிளி/ பேராலை சி.சி.த.க.பாடசாலையின் புதிய களஞ்சிய அறைத் திறப்பு விழா நேற்று முன்தினம்(16), பாடசாலை அதிபர் நடராசா ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கலந்துகொண்டார்.
இதன் போது அவர் தெரிவித்ததாவது,
தற்கால இளைய சமூகம் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்திகளின் பின்னணி என்பது, சமூகம் குறித்த சிறிய பார்வை நோக்கியும், பொதுநலன் சார் சிந்தனை நோக்கியும் அவர்களின் மன உலகு விரிவடையாமையினால் ஏற்பட்டதே.!
அத்தகைய சமூகப் பிறழ்வு நடத்தைகளிலிருந்து எமது அடுத்த சந்ததியை மீட்சியுறச் செய்ய வேண்டிய காலக் கடமையின் பெரும்பங்கு பாடசாலைகளுக்கு உண்டு. அந்தவகையில் தனிமனித நடத்தை மற்றும் வாண்மை விருத்திக்கான வாசல்களைத் திறப்பதன் மூலம் உருவாக்கப்படும் ஆளுமை மிக்க அடுத்த சந்ததியின் மூலமே எமது இனத்தின் இருப்பை உறுதிசெய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
மேற்படி களஞ்சிய அறை நிர்மாணத்திற்கான நிதி, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களின் 2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.