முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார் கட்டு கமநல சேவை பிரிவுக்குற்பட்ட நெத்தலியாறு பகுதியில் 2024 ஆம் ஆண்டுக்கான பெரும் போக நெற்செய்கை செய்யப்பட்ட ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான வயல் நிலங்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை காரணமாக முற்று முழுதாக நீரில் மூழ்கியுள்ளது.
அறுவடை செய்வதற்கு ஓரிரு நாட்களே இருந்த நிலையில் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நோய் தாக்கம் காரணமாக மிக அதிகமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நெற் கதிர்கள் முற்றுமுழுதாக நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக விவசாயிகள் மாத்திரமே அனைத்து வகையிலும்பாதிக்கப்படுவதாகவும் சிலர் தமது நகைகளை வங்கி மற்றும் தனியாரிடம் அடகு வைத்து இம்முறையாவது அதை மீட்டெடுக்கலாம் என எண்ணி இருந்ததாகவும் அதுவும் கைகூடாத நிலையில் தற்பொழுது என்ன செய்வது என்று அறியாத நிலையில் தாம் பெரும் கவலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அரசாங்கம் தமக்கு ஏதேனும் ஒரு வகையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு உதவி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.