துணிச்சல் இருந்தால் வழக்கை மீளப்பெற்று தமிழரசுக் கட்சியின் பொதுச்சபையைக் கூட்டுங்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவினருக்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சி.சிவமோகன் சவால் விடுத்துள்ளார்.
அத்துடன், கொழும்பான்களின் கூக்குரலுக்கு நான் பயந்தவன் அல்லன். என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்சபைக்கே உள்ளது என்றும் சிவமோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“கட்சியின் யாப்பே அதன் முதுகெலும்பு. திருகோணமலையில் கட்சி மீது தொடரப்பட்ட வழக்கின் மூலம் எமது பொதுச் சபையானது முடக்கப்பட்டுள்ளது. அப்போது இனிமேல் யாப்பு மீறல் செய்ய மாட்டோம் என்று பேசப்பட்டது. ஆனால், மீண்டும் அதே யாப்பு மீறலை மத்திய குழு செய்கின்றது என்றால் இதன் நோக்கம் என்ன? பொதுக் குழுவுக்கு எதிராக நீதிமன்ற வழக்குகளை நடத்தியவர்கள் யார்? என்பது வெளிப்படுத்தப்பட வேண்டிய விடயம். மத்திய குழுவை அரசியல் மாபியாக்களின் கூடாரமாக மாற்றக்கூடாது.
கடந்த ஒரு மத்திய குழுக் கூட்டத்தில், மாவை சேனாதிராஜாவைப் பார்த்து, ‘கதிரையில் இருக்க வேண்டாம். உங்கள் இராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது’ என்று சொன்ன நபர் மத்திய குழுவிலேயே இல்லாத ஒருவர். மத்திய குழுவில் இல்லாத ஒருவர் உள்ளே எடுக்கப்பட்டு அவரால் சேறு பூசப்படுகின்றது. இறுதிக் கூட்டத்துக்கு முன்பாக, நிகழ்ச்சி நிரலைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு தலைவர் மாவை சேனாதிராஜா கடிதம் அனுப்பினார். ஆனால், அதற்கு முந்தைய திகதியைப் போட்டு பதில் செயலாளர் நிகழ்ச்சி நிரலை அனுப்பியுள்ளர். நிலைமை அவ்வாறே உள்ளது.
பதில் செயலாளர் என்ற போர்வையில் ஒருவர் இருந்துகொண்டு யாப்பை மீறிச் செயற்பட்டமையாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குத் துணிவு இருந்தால் வழக்குகளை மீளப்பெற்று பொதுச் சபையைக் கூட்டுமாறு சவால் விடுக்கின்றேன்.
பொதுச் சபை கூட்டப்பட்டால் மட்டுமே மாபியாக்களிடம் இருந்து தமிழரசுக் கட்சியை மீட்க முடியும்.
தேசியப் பட்டியல் என்பது சமுதாயத்தில் கௌரவமான ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும். ஏறி மிதிச்சாலும் தலையைத் தூக்கத் தெரியாத நாக்கிளி பாம்புகள், காணி பிடிக்கின்ற மாபியாக்கள், ஜனநாயக மறுப்பை செய்யும் சுயநலவாதிகளே தேசிய பட்டியலில் வந்தவர்கள். இதனால் கட்சியை வளர்க்க முடியுமா?” – என்றார்.