குருநாகல், வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரலுவாவ பகுதியில் வீடொன்றில் தம்பதியினர் மீது இனந்தெரியாத ஒருவர் நேற்று (24) இரவு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த தம்பதியினர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மரலுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஆவார். காயமடைந்த 30 வயதுடைய பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பிலான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.