வவுனியா நகரில் வெளிநாட்டவர்களையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தி கடைத் தொகுதி, வீதிகளில் கைக் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள் தொடர்பில் அதிகாரிகள் அல்லது பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஊதுபத்தி விற்கும் பெண்களின் தொல்லை நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும், ஊதுபத்தி விற்பது போல் பெண்களை வசியப்படுத்தி நகைகளைப் பறிக்க முயற்சி செய்வதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இவர்கள் ஒரு குழுவாகவே வெளியிடங்களில் இருந்து வருகை தந்து கைக்குழந்தையுடன் அமர்ந்து இருக்கின்றனர். அதிகமானவர்கள் கர்ப்பிணிப் பெண்களாகவும், பாலூட்டும் தாய்மார்களாகவும் உள்ளனர். இதில் சிறுமிகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஊதுபத்தி விற்பனை செய்யும்போது ஊதுபத்தியைப் பார்த்துவிட்டு வாங்குவதற்குத் தவறும் பட்சத்தில் பொதுமக்களையும், வெளிநாட்டவர்களையும் தகாத வார்த்தைகளால் அவதூறாகப் பேசுவது உள்ளிட்ட செயல்களில் இவர்கள் ஈடுபடுகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் நகர சபையினர் மற்றும் பொலிஸார், சிறுவர் பாதுகாப்புப் பிரிவு, மாவட்ட செயலகம் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த சகலருக்கும் தெரிந்திருந்தும், தெரியப்படுத்தியிருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இவ்வாறான நடவடிக்கைகளினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
எனவே, பொறுப்பு வாய்ந்தவர்கள் இனிவரும் காலங்களில் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.