ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையில் கூடியது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதான பங்காளிக் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் தேர்தல்களுக்கு முகம் கொடுத்திருந்தது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் முருகேசு பரணிதரன், தவிசாளர் ஜெயபாலன், நிதிச் செயலாளர் கணேசன், இணை உப தலைவர் சசிகுமார், நிர்வாகச் செயலாளர் பிரியாணி உட்பட கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, களுத்துறை, மாத்தளை ஆகிய மாவட்ட அமைப்பாளர்கள், பிரதிநிதிகள் அடங்கிய அரசியல் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
நடைபெற்ற தேர்தல்கள், நாடு முழுவதும் கட்சியின் வியூகங்கள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
பல சவால்களுக்கு மத்தியிலும் கட்சி சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டமை தொடர்பாகவும், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள திட்டங்கள் பற்றியும் தீர்க்கமாகக் கலந்துரையாடப்பட்டது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பல சாத்தியங்கள் ஆராயப்பட்டன.
தனித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணி சின்னத்தில், தமிழ் முற்போக்குக் கூட்டணியாக மின்சூழ் (டோர்ச்லைற்) சின்னத்தில் அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் களம் இறங்குவது என்ற பல சாத்திய, சாதக பாதகங்கள் ஆராயப்பட்டன.
கட்சியின் சர்வதேச தொடர்பாடல்கள் விவகார உப தலைவராக பாரத் அருள்சாமி, கட்சியின் பிரச்சார செயலாளராக ஏ.ஆர்.வி. லோஷன், உதவிச் செயலாளராக பாலசுரேஷ் குமார் ஆகியோர், தலைவர் மனோ கணேசனால் பிரேரிக்கபட்டு அரசியல் குழுவினால் ஏகமனதாக ஆமோதிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நேற்றைய ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அரசியல் குழுக் கூட்டத்தையடுத்து எதிர்வரும் வாரங்களில் அனைத்து மாவட்ட அரசியல் குழுக் கூட்டங்களும் நடைபெறும்.