மியன்மாரில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் வந்த 115 ரோகிங்யர்களை முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை அஷ்ரப் இறங்கு துறைக்கு நேற்று (20)கொண்டு செல்லப்பட்டு திருகோணமலை துறை முகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த படகில் பயணித்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வாக்கு மூலத்தை பதிவு செய்ததன் பின்பு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் அப்துல் சலாம் சாஹிர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அகதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ச. டெ. சஷ்னி குறித்த நபர்கள் சந்தேக நபர்களன்றி அகதிகளாக கருதப்பட வேண்டும் எனவும் இவர்களை நுகேகொடையில் உள்ள அகதிகள் தங்குமிடமான மிரிகானைக்கு அனுப்புமாறு தனது விண்ணப்பத்தை பதில் நீதிவானிடம் முன்வைத்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட பதில் நீதிவான் குறித்த அகதிகளை மிரிகானை பகுதிக்கு அனுப்புமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டார் தற்போது அனுப்ப முடியாத நிலை உள்ளதால் இன்று (21) குறித்த அகதி முகாமுக்கு அனுப்பலாம் என அவர்களது விண்ணப்பத்தை சமர்ப்பித்த பொலிஸார் இவர்களில் 115 நபர்களில் 103 நபர்களை திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை நேற்று (20) இரவு முன்னெடுத்தனர்.
திருகோணமலை துறை முக பொலிஸார் குடிவரவு குடியகழ்வு சட்டத்தின் பிரகாரம் வழக்கினை பதிவு செய்து படகு ஓட்டுனர், உதவியாக இருந்தவர்கள் மற்றும் பயண ஏற்பாடுகளை செய்த குற்றச்சாட்டில் 12 நபர்களை தடுப்புக்காவலில் வைக்குமாறும் குறித்த பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
குறித்த 103 நபர்களுக்கும் தேவையான உணவு சுகாதார வசதிகளை ஏற்பாடு செய்து உரிய பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள்,சிறுவர்களும் உள்ளடங்குவர்.