ஹட்டன் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடி, விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று புதன்கிழமை (04) கைது செய்யப்பட்டார்.
வீடுகளில் உள்ள உடமைகளை சிலர் திருடுவதாக ஹட்டன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த ஹட்டன் பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்து விசாரணைக்குட்படுத்தினர்.
அவரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், திருடப்பட்ட பொருட்களான காலணிகள், எரிவாயு சிலிண்டர்கள், ஆடைகள் என்பன ஹட்டன் பிரதேசத்தில் பலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பகுதியில் திருடப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்த 6 பேரை கைது செய்துள்ளதாகவும், திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் என்றும் அவர், போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹட்டன் பொலிஸ் பரிசோதகர் குமாரகே தெரிவித்தார்.