அம்பாறை மாவட்டம் – மாவடிப் பள்ளியில் வெள்ளத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்த சம்பவம் – மத்ரஸா நிர்வாகத்தினரின் தகவல்.(எஸ்.அஷ்ரப்கான் – 076012 3242)அம்பாறை மாவட்டம் – மாவடிப் பள்ளியில் வெள்ளத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்த சம்பவத்தில் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளர், மத்ரஸா மாணவர்கள் 13 பேர்கள் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போயிருந்த சம்பவம் தொடர்பில் நிந்தவூர் காசிபுல் உலூம் அரபுக் கல்லூரி நிர்வாகம் இவ்விடயம் தொடர்பில் என்ன நடந்தது என்பது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவல்,எங்களுடைய மத்ரசா நிர்வாகமும் அதிபர் உட்பட அனைவரும் தீர்மானித்ததற்கு அமைய, அனர்த்தம் ஒன்று ஏற்படுகின்ற பட்சத்தில் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கக்கூடிய போதிய வசதிகள் எமது மத்ரசாவில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனால் அவர்களை அங்கு தொடர்ந்து வைத்திருந்து பராமரிப்பது என முடிவு செய்திருந்தோம். ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட பலத்த காற்றுடன் ஆன மழை காரணமாக எமது காஸிபுல் உலூம் அரபுக் கல்லூரியினுடைய மாணவர் விடுதி, வகுப்பறைகள், தொழுகை அறைகள் என்பன மழை நீரினால் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் இரண்டு மாணவர்கள் இந்நிலைமையால் விபத்தை அங்கு சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மலசலகூட குழிகள் கூட நிரம்பி காணப்பட்டது. இப்படி அடிப்படை வசதிகள் கூட மாணவர்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டதனால் மீண்டும் நாங்கள் எங்களுடைய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கூடி முடிவெடுத்தோம், மாணவர்களை பாதுகாக்கின்ற அடிப்படையில் கல்லூரிக்கு விடுமுறை வழங்கி மாணவர்களை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற முடிவினை எடுத்தோம். இதற்காக பிரத்தியேகமாக ஒரு பஸ் வண்டியினை வாடகைக்கு அமர்த்தி மாணவர்களை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தோம். ஆனால் சம்மாந்துறைக்கு மாணவர்களை ஏற்றி கொண்டு சென்றபோது காரைதீவில் இருந்த பாதுகாப்பு தரப்பினர் பஸ் வண்டியில் செல்ல முடியாது என்றும் உழவு இயந்திரத்தின் ஊடாக போக்குவரத்து செய்யப்படுகின்றது என்றும் கூறியதன் விளைவாக நாங்கள் அதிலே அனுப்ப சம்மதித்தோம் இதனை மாணவர்களுடைய பெற்றோர்களுக்கும் அறிவித்து அவர்கள் மறுமுனையில் நிற்கிறோம் நீங்கள் அனுப்புங்கள் என்று கூறியதன் பிற்பாடுதான் நாங்கள் மாணவர்களை உழவு இயந்திரத்தில் அனுப்பினோம். ஆனால் இறைவனின் ஏற்பாடு அந்த உழவு இயந்திரம் கவிழ்ந்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதுவே உண்மை நிலைமையாகும் என குறிப்பிட்டனர்.குறித்த சம்பவத்தில் மத்ரஸா மாணவர்கள் 13 பேர்களும், உழவு இயந்திர சாரதி, நடத்துனர் உட்பட 15 பேர் உழவு இயந்திரத்தில் பயணித்ததாக மத்ரஸா நிர்வாகம் தெரிவித்துள்ளது.மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு மற்றும் பாதுகாப்பு படையினரின் தேடுதல் நடவடிக்கையின்போது O7 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.மீதியானவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்து இன்றும் (28) நடைபெற்று வருகின்ற நிலையில், இன்றுவரை 07 ஜனாஸாக்கள் மீட்புப்பணியாளர் களினால் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதில் இருவர் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரரும் எனவும்ஏனையவர்கள் 05 மத்ரஸா மாணவர்கள் எனவும் இனங்காணப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்னும் ஒரு மத்ரஸா மாணவர்களைத் தேடும் பணிகள் இடம் பெறுவதாக பொலிசார் தெரிவித்தனர்.மத்ரஸா முடிந்து மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இந்த விபத்து நடைபெற்றுள்ளது. மீட்பு பணியின் போது விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் உழவு இயந்திரமும் நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது.