சமூக சேவைகள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட “ஸ்வாஹிமானி” 2024 தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வு 07.11.2024 அன்று சுகுறுபாயவிலுள்ள 19 ஆவது மாடியில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் திரு ரஞ்சித் ஆரியரத்ன அவர்கள் கலந்துகொண்டார்.
யாழ்ப்பாண மாவட்டம் மூன்று விருதுகளை பெற்று தமிழ் மாவட்டங்களில் அதிக விருதுகளை பெற்ற மாவட்டமாக பெருமை சேர்த்துள்ளது. நல்லூர் பிரதேச வழிகாட்டல் குழு முதலாம் இடத்தினையும், 50 இற்கும் குறைவான மாற்றுத்திறனாளிகளை தொழிலில் ஈடுபடுத்திய நிறுவனமாக மாற்று வலுவுடையோர் புனர்வாழ்வு நிறுவனம் (AROD) இரண்டாம் இடத்தினையும், சிறந்த காட்சிப்படுத்தும் மட்டத்திலான படைப்பாளியாக கோப்பாய் பிரதேசத்தை சேர்ந்த திரு. த.சுரேஸ்குமார் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்கள்.
இந் நிகழ்வில் அழைப்பாளராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டார்.