பிலிப்பைன்சில் டிராமி புயல் தாக்கியதன் எதிரொலியாக கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 82 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் வடமேற்கு பகுதியான படாங்காஸ் மாகாணத்தை, டிராமி புயல் சமீபத்தில் தாக்கியது.
இதன் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்ததுடன், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதில், குடியிருப்புப் பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால், சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இதற்கிடையே, வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவர்களை, படகுகள் வாயிலாக மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். இதேபோல் சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கனமழையை தொடர்ந்து ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி, பலர் நிலத்திற்கு அடியில் புதைந்ததாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகளில் சிக்கி, 82 பேர் இறந்ததாக படாங்காஸ் மாகாண அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பெரும்பாலானோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, தலிசே நகரைச் சேர்ந்த 20 பேர் மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நாட்டின் சில பகுதியில் புயலுடன் கூடிய வானிலை இன்னும் நீடித்து வருவதால், நிவாரண பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுஉள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயலால், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதில், 75,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்து, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.