இலங்கையைச் சேர்ந்த, ‘ஸ்லிட் நார்தன் யுனி’ நிறுவனமும், தமிழகத்தைச் சேர்ந்த, ‘ஸ்பேஸ் கிட்ஸ்’ நிறுவனமும் இணைந்து, செயற்கைக்கோள் தயாரிக்கும் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளன.
‘ஸ்பேஸ் கிட்ஸ் இண்டியா’ நிறுவனர் ஸ்ரீமதிகேசன் கூறியதாவது:
கனடாவுக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரான பத்மநாபனின், ‘ஸ்லிட் நார்தன் யுனி’ நிறுவனம் மற்றும் இலங்கை அரசு ஒத்துழைப்புடன், அந்நாட்டு மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை கற்பிக்கும் பணியை ஏற்றுள்ளோம்.
இதற்காக, இலங்கையில் படிக்கும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில் அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு, அதிலிருந்து தேர்வாகும் 50 மாணவர்களுக்கு, நார்தன் யுனி நிறுவனம் நிதியுதவி செய்ய உள்ளது.
இந்த பயிற்சியில், தமிழகத்தைச் சேர்ந்த 10 மாணவர்களும் பங்கேற்பர். மேலும், செயற்கைக்கோளை ஏவுதல், தயாரித்தலுக்கான நேரடி பயிற்சியில், இலங்கை கல்லுாரிகளைச் சேர்ந்த 30 மாணவர்களும் பங்கேற்பர். அவர்களுக்கு விண்வெளி ஆய்வு, அதிநவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை ஆய்வு செய்யும் வகையிலான செயற்கைக்கோள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தயாரிக்கும் செயற்கைக்கோள், இஸ்ரோவுடன் இணைந்து விண்ணில் நிலைநிறுத்தப்படும்.
இதனால், இருநாட்டு மாணவர்களின் கல்வி, தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு சார்ந்த அறிவு மேம்படும்.