ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு (புதன்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணிக்கு இந்த சீசன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. ராஜஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 286 ரன்கள் குவித்து மலைக்க வைத்த அந்த அணி, அதன் பிறகு வரிசையாக 4 ஆட்டங்களில் (லக்னோ, டெல்லி, கொல்கத்தா, குஜராத்துக்கு எதிராக) தோல்வியை தழுவியது. 6-வது ஆட்டத்தில் பஞ்சாப்பை பதம் பார்த்தது. முந்தைய ஆட்டத்தில் மும்பையிடம் வீழ்ந்தது. 200 ரன்னுக்கு மேல் எடுத்த இரு ஆட்டங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ள ஐதராபாத் அணி, அதற்கு குறைவாக ரன் எடுத்த ஆட்டங்களில் தேறவில்லை.
ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (242 ரன்), அபிஷேக் ஷர்மா (232), ஹென்ரிச் கிளாசென் (210), இஷான் கிஷன், நிதிஷ்குமார் என்று அதிரடி சூரர்களுக்கு குறைவில்லை. அவர்கள் நிலையான திறனை வெளிப்படுத்த தவறுவதால் தான் அந்த அணி தகிடுதத்தம் போடுகிறது. பந்து வீச்சும் பாராட்டும் வகையில் இல்லை. ஹர்ஷல் பட்டேல், கேப்டன் கம்மின்ஸ், முகமது ஷமி, இஷான் மலிங்கா, ஜீஷன் அன்சாரி ஓரளவு நன்றாக வீசுகிறார்கள்.
5 முறை சாம்பியனான மும்பை அணி 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் 6-வது இடம் வகிக்கிறது. முதல் 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற அந்த அணி அதன் பிறகு எழுச்சி கண்டு 3 ஆட்டங்களில் (டெல்லி, ஐதராபாத், சென்னைக்கு எதிராக ) தொடர்ச்சியாக வெற்றி பெற்று வீறுநடை போடுகிறது.
மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (333 ரன்), திலக் வர்மா (231), ரையான் ரிக்கெல்டன் (204) நல்ல நிலையில் உள்ளனர். பார்மின்றி தவித்த தொடக்க வீரர் ரோகித் சர்மா ஒரு வழியாக சென்னைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 76 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்தார். பந்து வீச்சில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, மிட்செல் சான்ட்னெர் கலக்குகிறார்கள்.
மும்பைக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், அவர்களின் வெற்றிப்பயணத்துக்கும் முட்டுக்கட்டை போட ஐதராபாத் அணி வரிந்து கட்டுகிறது. அதிரடி வீரர்கள் நிறைந்த இந்த ஆட்டத்தில் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.
இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14-ல் மும்பையும், 10-ல் ஐதராபாத்தும் வென்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, அபினவ் மனோகர் அல்லது அதர்வா டெய்ட், கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி, இஷான் மலிங்கா அல்லது வியான் முல்டெர்.
மும்பை: ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், வில் ஜாக்ஸ், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, அஷ்வனி குமார்.